புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை பின்பற்ற கால அவகாசம் அளிக்கும்படி, சமூக வலைதளமான, டுவிட்டர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் முதல், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிராக செய்திகளை பகிர்வோர் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பயனாளர்களின் புகார்களை விசாரிக்க, குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்து, ஆபாசப் படங்கள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்தாமல் இருந்த டுவிட்டர் நிறுவனத்திற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.