வரும் 2029 ல் 15 சூப்பர்சோனிக் விமானங்களை வாங்கி இயக்க உள்ளதாக,அமெரிக்க விமான நிறுவனமான United தெரிவித்துள்ளது.
டென்வரில் இருந்து செயல்படும் Boom என்ற நிறுவனம் Overture என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்சோனிக் விமானங்களை தயாரிக்கும். ஒலியின் வேகத்தை விடவும் வேகமாக பறக்கும் திறன் வாய்ந்தவை சூப்பர்சோனிக் விமானங்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 60 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு 1805 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விமானங்கள் பறக்கும். இதனால் பயண நேரம் பாதியாக குறையும். ஏற்கனவே கன்கார்ட் என்ற பெயரில், சூப்பர்சோனிக் விமானங்களை, 1976 முதல் இயக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர்பிரான்ஸ் அந்த சேவையை 2003 ல் நிறுத்திக் கொண்டன.
விமானம் பறக்கும் போது ஏற்படும் பயங்கர சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் அதிக பெட்ரோல் செலவுகளின் காரணமாக கன்கார்டுகளுக்கு விடை கொடுக்கப்பட்டன. ஆனால், Overture சூப்பர்சோனிக் விமானங்களில் பயோ எரிபொருள் பயன்படுத்தப்படும் எனவும் அதன் சத்தம் சாதாரண விமானங்களை போலவே இருக்கும் எனவும் Boom நிறுவனம் தெரிவித்துள்ளது.