புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
காணொலியில் நடைபெற்ற ஆலோசனையில் முதலமைச்சர்கள் ஜெகன்மோகன், நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, அந்தமான் துணைநிலை ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனிடையே தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 99 அணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புனேயில் இருந்து 5 அணியினர் விமானம் மூலம் புவனேசுவரத்துக்குச் சென்றுள்ளனர். ஒடிசா கடலோரப் பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 60 அணிகள் தேவையான கருவிகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.