அரபிக் கடலில் மேலும் பல புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமி வெப்பமயமாதல் பிரச்சினை காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கடல் கொந்தளிப்பு, புயல் போன்றவை அதிகளவில் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 150 முதல் 200 ஆண்டுகளில் அரபிக் கடலை விடவும் வங்கக்கடலில் நான்கு மடங்கு அதிகமான புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த புனே இந்தியா வானிலை மையத்தின் தலைமை அதிகாரியான கே.எஸ்.ஹோசாலிகர் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் உருவான புயல்களில் 4க்கு 1 என்ற வேறுபாடு நிலவுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இந்த நிலைமை மாறக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலை விட வெப்பம் குறைவாக உள்ள அரபிக் கடலிலும் இப்போது வெப்ப நிலை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன