சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன. கொரோனோ நோயாளிகளுக்கான சாதாரண படுக்கைகள் மட்டுமே சொற்ப அளவில் மீதம் உள்ளன.
அதே போல் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆக்சிஜன் வசதியுடன் கூடியதும், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் அனுமதிக்கக்கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன.
சென்னையில் அந்தந்த அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் 13 கொரோனா ஹெல்த் கேர் மையங்களை பொருத்தமட்டில் 1022 படுக்கைகளில் 377 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் உள்ள 5,660 படுக்கைகளில் 2,484 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.