கேரளாவில் இடதுசாரி கட்சிக் கூட்டணி, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இத்தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜக 3 வது அணியாகவும் களம் இறங்கின.
கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனியாக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதேபோல் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 21 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சிக்கு ஏற்கனவே இருந்த ஒரு எம்எல்ஏ தொகுதியும் கைவிட்டுப் போனது. இந்தத் தேர்தலில் இடது சாரி கூட்டணிக் கட்சிகள் 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.