நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் குறித்த பேச்சு பரவலாக எழுந்துள்ளது.
வளிமண்டலத்தில் 78 விழுக்காடு நைட்ரஜனும் 21 விழுக்காடு ஆக்சிஜனும், ஒரு விழுக்காடு மற்ற வாயுக்களும் உள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டி என்ற கருவி மூலம் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை அப்படியே நேரடியாக வடிகட்டிப் பயன்படுத்த முடியும்.
நிமிடத்துக்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜனை வழங்கும் இந்தக் கருவி மூலம் குறைவான பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் 24 மணி நேரமும் ஆக்சிஜனைப் பெற முடியும். மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நிமிடத்திற்கு 40-50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படலாம் என்பதால் அவர்களுக்கு இந்த செறிவூட்டிகளை பயன்படுத்த இயலாது.
அதேசமயம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னிச்சையாக வாங்கி பயன்படுத்தக் கூடாது என்றும் நிபுணர்களின் உதவியுடனேயே நிறுவி முறையான வழிகாட்டுதலுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.