மேற்கு வங்கத்தில் எட்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒன்பதரை மணி நிலவரப்படி 16 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு எட்டுக் கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இன்று எட்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்தியப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளைக் கடைப்பிடித்து மக்கள் போதிய இடைவெளிவிட்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நடிகரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவின் காசிப்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இப்போதுள்ளதைப் போல் எப்போதும் அமைதியான வாக்குப்பதிவைக் கண்டதில்லை எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரும் அவர் மனைவியும் கொல்கத்தா சவுரிங்கீயில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
அதன்பின் பேசிய ஆளுநர் ஜெகதீப் தங்கர், கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.