டெல்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், இதில் 8 ஆலைகளை மத்திய அரசு அமைக்க உள்ளதாகவும் 36 ஆலைகளை டெல்லி அரசு அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றில் பிரான்சில் இருந்து பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ள 21 ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களை வாங்க இருப்பதாகவும் அவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
உபரி ஆக்சிஜனை வழங்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தாம் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், தமது முயற்சிக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.