ஹரிதுவார், வாரணாசி, பிரயாக் ராஜ் உள்ளிட்ட கங்கை நதிக்கரைகளில் கும்ப மேளா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவியதையடுத்து தங்களைப் பொறுத்தவரை கும்பமேளா நிறைவு பெற்றுவிட்டதாக மகா நிர்வாணி அகாரா என்ற காவியுடை சாமியார்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் சுவாமி கபிலேஷ் ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்துக் கொள்ள மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தார். கொரோனா பாதிப்பால் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கும்பமேளாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சாமியார்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே கர்நாடகா போன்ற பல்வேறு மாநில அரசுகள் கும்பமேளா சென்று திரும்பும் யாத்ரீகர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்த பிறகே மாநிலத்திற்குள் அனுமதிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.