சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டுள்ள எவர் கிவன் கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி சீனாவிலிருந்து ராட்டர்டாம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த 6 நாட்களாக கப்பலை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது. இழுவை கப்பல்கள் மூலமாக கப்பலை மீட்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்தது. இது போன்ற விபத்தில் சிக்கும் கப்பல்களை மீட்பதில் திறமை மிகுந்த நெதர்லாந்தின் போகாலீஸ் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்கள் சூயஸ் கால்வாய்க்கு வந்து , ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனால், மீட்புபணி தீவிரமடைந்தது. இந்த நிலையில், 29 ஆம் தேதி காலை 4.30 மணியளவில் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் இன்ஜீன்கள் ஆன் செய்யப்பட்டு விட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கப்பலின் முன் பகுதியில் இருந்த 27 கியூபிக் மீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 18 அடிக்கு மண் அகற்றப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இழுவை படகுகள் இழுத்ததில் கப்பல் நகர்ந்துள்ளது. மேலும் , high tide அலையும் கப்பலை மீட்க உதவியதாக சொல்லப்படுகிறது.கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கப்பல் சரியான பாதையை நோக்கி திருப்பப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, கால்வாயின் கரையிலிருந்து 102 மீட்டர் உள்புறமாக எவர் கிவன் திரும்பியுள்ளது.
எனினும், இந்த தகவலை எவர் கிவன் கப்பலின் தொழில்நுட்ப விவகாரங்களை மேற்கொள்ளும் Bernhard Schulte Shipmanagement நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் கப்பல் முற்றிலும் மீட்கப்பட்டு சூயஸ் கால்வாய் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என தெரிகிறது. இதுவரை, 369 பிரமாண்ட கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடந்து செல்ல காத்திருக்கின்றன. இதற்கிடையே, 15 கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை தாண்டி ஐரோப்பா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளன. எவர் கிவன் கப்பல் மீட்கும் பணி முழுமையடயவில்லை என்ற போதிலும் நேற்று பிரென்ட் கச்சா எண்ணெய் 1 டாலர் குறைந்து 63.67 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகிறது.