நமது நாட்டின் பெண்கள் கல்வி பெறுகின்ற போது, அவர்களது வருங்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் வருங்காலமும் பாதுகாக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் பதினாறாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், இங்குள்ள பெரும் பாரம்பரியத்துடன், தமக்கு தொடர்பு உள்ளதைப் போல உணருவதாக கூறினார். கல்வி முறையிலிருந்து வெளி வரும் மாணவர், அதிக தன்னம்பிக்கையுடனும், எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தகுதியை உடையவராக இருக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதிக பொருளாதார வளர்ச்சி, அதிக முன்னேற்றம் ஆகியவற்றை அடைந்துள்ளதால், நம்மிடமிருந்து அதிகமாக கற்றுக்கொள்ளும் ஆவலுடன் உலகம் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். பேச்சின் போது, “கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்ற திருக்குறளையும், “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற தமிழ் பழமொழியையும் அவர் மேற்கோள் காட்டினார்.