உலக மகளிர் நாளையொட்டித் தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மரபுச் சின்னங்களைப் பார்வையிடப் பெண்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் தாஜ்மகால், மகாராஷ்டிரத்தின் அஜந்தா, எல்லோரா குகைகள், தமிழகத்தில் மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் பெரிய கோவில் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மரபுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவற்றைப் பார்வையிட உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கட்டணமும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகக் கட்டணமும் பெறப்படுகிறது.
மார்ச் 8 அன்று உலக மகளிர் நாள் என்பதால் அந்த நாளில் மரபுச் சின்னங்களைக் கட்டணமின்றிப் பார்வையிடப் பெண்கள் அனுமதிக்கப்படுவர் எனத் தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.