அதிமுக, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் அவரவர் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியான பிறகே, தேர்தல் அறிக்கை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது. வேட்பாளரை இறுதி செய்யும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் ஆகியோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனை முடிவில், முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகமும் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தனித் தொகுதியில் எம்.எல்.ஏ தேன்மொழி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர், துணை முதல்வருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினர்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் 11 குழுவினர், வெள்ளிக்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு, இறுதிவடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலத்திற்கு மாலை 5.30 மணியளவில் வந்த முதலமைச்சர், துணை முதல்வர் ஆகியோரை, தேர்தல் அறிக்கையை தயாரிப்பு குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்தவுடன் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும், அதன்பிறகே, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.