பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க, மத்திய மாநில அரசுகள் இணைந்து சாதகமான முடிவை எடுக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதியாக கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது மறைமுக விதிகள் விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது வருவாயை பெருக்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. அத்துடன் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் உற்பத்தி செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளது என சக்திகாந்த தாஸ் கூறினார். கிரிப்டோகரன்சிகளிடம் இருந்து மிகவும் மாறுபட்ட டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.