சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கைத் திரும்பப் பெறக் கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்து அமைப்பினரும், பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் சபரிமலை போராட்டம் தொடர்பான வழக்குகளையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறக் கேரள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதேநேரத்தில் வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட கடுங்குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படாது.