இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி 50 விழுக்காடு இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள் காலையிலேயே வரிசையில் நின்று அரங்கத்துக்குள் சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை காண அனுமதிக்கப்பட்டதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்பதால் இதன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே சுப்மன் கில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாசிங்டன் சுந்தர், பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.