உத்தரகாண்ட் மாநிலம் தபோவன் பகுதியில் பனிச்சிதறல் காரணமாக நேரிட்ட விபத்தில் சுரங்கத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்பதற்கு விடிய விடிய ஜேசிபி இயந்திரம் கொண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி, கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத் எல்லை படை ஆகியவற்றை சேர்ந்த 600-க்கு மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளே இருந்து சேறும், தண்ணீரும் வந்து கொண்டிருப்பதால், முன்னேறி செல்வது சிரமமாக இருந்ததாகவும் சுரங்கத்தில் பாய்ந்த வெள்ளத்தால் சேறாகி காட்சியளித்த மண் தற்போது காய்ந்து கெட்டித் தட்டியதால் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி மீட்பு முயற்சியைத் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.