வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடிவடிக்கையை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன என்றார். கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வைக்கூட சிலர் கிண்டல் செய்தனர் என்ற அவர், ஏழைகள்கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்கு ஏற்றினர், ஆனால், அரசை எதிர்க்கவேண்டும் என்பதற்காக சிலர் கிண்டல் செய்தனர் என்றார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை ,அவை குறிப்புகளில் இருந்து படித்துக்காட்டிய மோடி, அதையே இப்போதையே அரசு செய்திருக்கிறது என்றார்.. விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என்பது குறித்து விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற அவர், விவசாய பிரச்சனைகளைப் பற்றி பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்துவிடுகின்றனர் என்றார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை அன்றும், இன்றும், என்றும் இருக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விவசாய சட்டங்கள் குறித்த விமர்சனங்களை ஏற்பதாகவும், பாராட்டுக்களை எதிர்க்கட்சிகள் ஏற்கட்டும் என்ற அவர், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு வேளாண் சட்டங்களின் அவசியத்தை நாம் விளக்க வேண்டும் என்றார். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் அரசின் கதவுகள் திறந்தே உள்ளதாக அவர் தெரிவித்தார்.