அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்பதால், கட்சியின் கொடியைப் பயன்படுத்த உரிமை இல்லை என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கடந்த 31 ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ் ஆன போது அதிமுக கொடியுடன் இருந்த காரில் சென்றார். அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்பதால், கட்சியின் கொடியைப் பயன்படுத்த உரிமை இல்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலராக டிடிவி தினகரனை நியமனம் செய்தது செல்லாது என 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்.