டெல்லியில் குடியரசு நாளில் நடந்த வன்முறையில் தொடர்புள்ளதாகக் கருதப்படுவோர் பற்றித் துப்புக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.
டெல்லியில் குடியரசு நாளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது, சாலைத் தடுப்புகளை அகற்றியதுடன் காவலர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. டெல்லி செங்கோட்டைக்குச் சென்றவர்கள் அங்குச் சீக்கியர்களின் நிசான் சாகிப் கொடியை ஏற்றினர்.
இந்நிலையில் வன்முறையில் தொடர்புடையதாகக் கூறப்படும் தீப் சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் பற்றித் துப்புக்கொடுத்தால் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என டெல்லிக் காவல்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் ஜஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் பற்றித் துப்புக்கொடுத்தால் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.