மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே அரசின் சேவைகளை பெற 1100 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். மேலும் நதிநீர் இணைப்புத்திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத்திட்டம் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான் என்றார். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என கூறினார். முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவித்த அவர், மக்கள் வீடுகளில் இருந்தவாறே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம் என தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றார் ஆளுநர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது என்ற அவர், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும் எனவும் கூறினார்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும் என ஆளுநர் தமது உரையில் கூறினார்.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை துவக்கிவிட்டன என்றார் ஆளுநர். உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 2.42 லட்சம் பேருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திலும் தமிழகம் 60,674 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டும் தெரிவித்தார். தமிழகத்தில் விரைவில் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை வெளியிடப்படும் எனவும், தமிழக பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் எனவும், 2021 நவம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ இடையிலான மெட்ரோ சேவையை இம்மாதத்திற்குள் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாகவும் கோவை கோல்டுவின்ஸ் முதல் - உப்பிலிப்பாளையம் வரை ரூபாய் 1620 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.