தலைநகரின் எல்லைப் பகுதிகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி டெல்லியை நோக்கி முன்னேறியது. அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்துவிரட்ட முயன்றதால் சில இடங்கள் போர்க்களம் போல மாறின.
மத்திய அரசு இயற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் இடைவிடாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல சுற்று பேச்சுவார்த்தைகள், சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தல் என மத்திய அரசு முன்வந்தபோதிலும், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் மூன்றரை லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடத்த முடிவுசெய்த விவசாயிகள், அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா நடைபெற்று முடிந்த பிறகு, 12 மணிக்குப் பிறகு, குறிப்பிட்ட வழித்தடங்களில் பேரணியை நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். இந்த டிராக்டர் பேரணிக்காக ஏற்கெனவே டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் ஆங்காங்கே குவிந்திருந்தனர்.
மூன்றரை லட்சம் டிராக்டர்களுடன் பேணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டதால் அதற்கேற்ப காவல்துறையினரும் தலைநகரின் எல்லைப் பகுதிகளிலும், பேரணி செல்லும் வழித்தடங்களிலும் போலீசாரை குவித்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வஜ்ரா வாகனங்கள், கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், ட்ரோன் கண்காணிப்பு, ஆங்காங்கே தடுப்பரண்கள் என போலீசார் தயாராக இருந்தனர்.
இந்நிலையில், டெல்லி-ஹரியானா இடையே அமைந்துள்ள சிங்கு வழியாக விவசாயிகள் டிராக்டர்களில் நுழைய முயன்றபோது, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்லக்கூடாது என போலீசார் தடுக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கெனவே அனுமதித்த பாதையில் இருந்து திருப்பிட போலீசார் முயன்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் டிராக்டர்களை விட்டு தடுப்புகளை தகர்த்து முன்னேறினர். சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் சஞ்சய்காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டது
போலீசாரின் வாகனத்தையும் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதன் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள திக்ரி எல்லை வழியாகவும் தடுப்புகளை தகர்த்துவிட்டு விவசாயிகள் டிராக்டர்களுடன் முன்னேறினர்.
டெல்லியில் முகார்பா சவுக் Mukarba Chowk பகுதியிலும் தடுப்புகளை அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.
டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் பாண்டவ் நகர் அருகே தடுப்புகளை மீறி விவசாயிகள் சென்றனர்.
கர்னல் பைபாஸ் பகுதியில் போலீசார் இரவில் வைத்த பெரிய பெரிய காங்ரீட் தடுப்புகளை விவசாயிகள் அகற்றிவிட்டு டிராக்டர் பேரணிக்கு சென்றனர்.
டெல்லி-உத்தரப்பிரதேசம் இடையே உள்ள காசிப்பூர் Ghazipur எல்லைப் பகுதி, டெல்லி-நொய்டா இடையே உள்ள சில்லா எல்லைப் பகுதி Chilla border என பல்வேறு பகுதிகள் வழியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். ஸ்வரூப் நகர் என்ற பகுதியில் உள்ளூர் மக்கள் விவசாயிகள் மீது பூத்தூவி வரவேற்றனர்.
காசிப்பூர் வழியாக சென்ற விவசாயிகள், டெல்லியில் ஐடிஓ என்ற பகுதியில் டெல்லி போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சூறையாடப்பட்டது.
இதேபோல டிராக்டர்களை விட்டு மோதி தடுப்புகளை தகர்த்துவிட்டு விவசாயிகள் முன்னேறிச் சென்றனர். ஆங்காங்கே சில இடங்களில் போலீசார் - விவசாயிகள் இடையே மோதல் மூண்டது. விவசாயிகளை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்
பேரணியில் பங்கேற்ற சிலர், டிராக்டர்களை காவல்துறையினர் மீது மோதுவது போல் கண்மூடித்தனமாக ஓட்டினர்.
விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அங்கு தங்களது கொடியை பல இடங்களில் ஏற்றினர்.
அனுமதிக்கப்படாத வழித்தடங்களில், தடுப்புகளை உடைத்துக் கொண்டு டிராக்டர்களை விவசாயிகள் ஓட்டிச் சென்றுள்ளதாகவும், காவல்துறையினரையும் தாக்கி இருப்பதாகவும் நன்குளாய் காவல் இணை ஆணையர் ஷாலினி சிங்தெரிவித்தனர். இது அமைதியான போராட்டம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே வன்முறையில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும், அவர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகேத் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.