ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தயாராக இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த அரண்மனைப்புதூர் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என உறுதியளித்தார்.
ஆட்சியில் இல்லாமலேயே கொரோனா காலத்தில் திமுக பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்ததாகவும், அதனை மக்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிய ஓ.பன்னீர் செல்வமே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை ஓ.பி.எஸ். கண்டுபிடிக்க தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அரசியலில் ஒரு சிலருக்கு கிடைக்கும் லக்கு ஓ.பி.எஸ்-க்கும் கிடைத்ததால் தான் அவருக்கு 3 முறை முதலமைச்சர் பதவி கிடைத்ததாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் போது, ஓ.பன்னீர் செல்வம் இதே பொறுப்பில் இருப்பாரா என்பதே கேள்விக்குறிதான் என்றும் ஸ்டாலின் கூறினார்.