கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தை தேடும் பணி நீடித்து வரும் நிலையில், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து, பொன்டியநாக் நகர் நோக்கி, ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில், 6 குழந்தைகள், விமானிகள், சிப்பந்திகள் 12 பேர் உட்பட 62 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகர்த்தாவின் S.H விமான நிலையத்திற்கு அருகாமையிலேயே, ஜகர்த்தா வளைகுடா உள்ளது. இந்த கடற்பகுதியின் மேற்பரப்பில், பறக்கத் தொடங்கியபோது தான், விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
விமான நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகி தீவு அருகே விமானம் விழுந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. விமானம் நல்ல நிலையில் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விமானம் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் ரோந்துக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே விமானத்தின் சில பாகங்கள் ஜகார்த்தா வளைகுடா பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. இதனால் விமானத்தைத் தேடும் பணி நள்ளிரவிலும் தொடர்ந்தது. விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.