இந்தோனேசியாவில், 6 குழந்தைகள் உட்பட 62 பேருடன் மாயமானதாக கூறப்படும் விமானம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த விமானத்தின், உதிரி பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள், ஜகர்த்தா கடலோர பகுதிகளில் மீட்கப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து, பொன்டியநாக் நகர் நோக்கி, ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-500 ரக விமானமான SJ182, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு கிளம்பியது.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, பலமுறை முயன்றும், விமானத்துடனான தொடர்பு கிடைக்காததால், மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விமானத்தில், 6 குழந்தைகள், விமானிகள், சிப்பந்திகள் 12 பேர் உட்பட 62 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகர்த்தாவின் S.H விமான நிலையத்திற்கு அருகாமையிலேயே, ஜகர்த்தா வளைகுடா உள்ளது.
இந்த கடற்பகுதியின் மேற்பரப்பில், பறக்கத் தொடங்கியபோது தான், விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜகர்த்தா வளைகுடா கடலோர பகுதிகளிலும், அதன் உட்புற பரப்பிலும், விமானங்களின் உதிரி பாகங்கள் போன்ற பொருட்கள், விமான மீட்பு மற்றும் தேடுதல் பணிக்குழுவினரால், மீட்கப்பட்டிருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.