மகாகவி பாரதியாரின் கூறிய சீர்திருத்தங்களை மனதில் இறுத்தி மத்திய அரசு செயல்படுவதாகவும், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிப்பதை உறுதி செய்திட, தொடர்ந்து பாடுபடுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில், காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கவிஞர், பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர் என பன்முகங்கள் கொண்ட பாரதியார், ஆகச்சிறந்த சமூக சீர்திருத்த கருத்துகளை கொண்டிருந்தவர் என குறிப்பிட்டார்.
பெண்கள் தற்சார்பு உடையவர்களாக திகழ வேண்டும் என விரும்பியவர் பாரதி என மகாகவிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். பெண்கள் தலைகுனிந்து நடக்காமல், நேர் கொண்ட பார்வையுடன் பீடு நடை போட வேண்டும் என பாரதி விரும்பியதாகவும், பிரதமர் கூறினார்.
அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே, என்ற பாடலை தமிழில் குறிப்பிட்ட பிரதமர், இப்பாடலை, இளையோர், உத்வேகமாக கருத வேண்டும் என்றார்.
இனியொரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம்..., தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்! என்ற பாரதியாரின் பாடலை தமிழில் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திரமோடி, ஏழை-எளிய மக்களுக்கான உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.