நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 62 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த நிவேதா அரிசி ஆலை உரிமையாளர் தனது ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
உரிமத்தை புதுப்பித்துத் தர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், தன்ராஜிடம் பணத்தைக் கொடுக்கவைத்து, கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் உள்ள தன்ராஜின் வீட்டில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பணம், 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயையும் 2 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றினர்.
அத்துடன் நாகப்பட்டினத்தில் தன்ராஜ் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கணக்கில் வராத 3 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆக மொத்தமாக கட்டுக்கட்டாக 62 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் ஆவணங்களும் அதிகாரிகளின் கைகளில் சிக்கியுள்ளன. தன்ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.