சென்னை அருகே ஓட்டல் அறையில் மர்மமாக உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது.
சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை சித்ராவின் சடலம், தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. சித்ராவின் வலது கன்னம் மற்றும் தாடையில் ரத்தக் காயம், சம்பவத்தின் போது அவரது கணவர் ஹேம்நாத் உடனிருந்தது என அவரது மரணத்தில் சந்தேக ரேகைகள் படர்ந்தன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.
இதனிடையே சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை, நேற்று ஆய்வு செய்த சென்னை மத்திய மண்டல ஆர்.டி.ஓ. லாவண்யா, காயங்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் சித்ராவின் உடற்கூராய்வு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. சித்ராவினது கன்னத்தின் தாடைப்பகுதியில் இருந்த காயங்கள் எதனால் ஏற்பட்டது. அவரது நகக்கீரலா, அல்லது வேறு ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.
ஒருவர் தூக்கில் தொங்கி உயிர்நீத்தால் அவரது கழுத்து எழும்பு உடைந்திருக்கும் என்றும் அதை வைத்து தூக்கிட்டதால், உயிரிழந்தாரா அல்லது உயிரிழந்த பின்னர் தூக்கிலிடப்பட்டாரா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழக்கும் போது, சுவாசிக்க முயற்சித்து நாக்கு வெளியில் வரும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சித்ரா விவகாரத்தில் அப்படியான விஷயங்கள் இல்லை என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே பிரேதப்பரிசாதனை முடிவுகள் வெளியான பிறகு தான் சித்ரா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும்.