கோவையில் மோசடி வழக்கில் இருந்து மனைவியை விடுவிக்க, பெண்ணை கொன்று, ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் பெற்ற வழக்கில், வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அமாசை என்ற பெண் கடந்த 2011- ஆம் ஆண்டு, கணவரின் சம்மதம் இன்றி தன் பெயரிலுள்ள சொத்தை தம்பி பெயருக்கு மாற்றி எழுதுவதற்காக சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேல் என்பவனை அணுகியுள்ளார். அந்த வழக்கறிஞர் ராஜவேலின் மனைவி மோகனா மீது ஏற்கனவே நிதி நிறுவனம் மூலம் 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒடிசாவில் வழக்கு பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞரான தனது மனைவியை விடுவிக்க சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்த ராஜவேல், தன்னிடம் கிளைண்டாக வந்த அமாசை என்ற பெண்ணை பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.
தனது கார் ஓட்டுநர் பழனிசாமி உதவியுடன் அமாசையை மின்சார ஒயரால் கழுத்தை நெறித்து ராஜவேல் கொலை செய்துள்ளான். பின்னர் சடலத்தை மாநகராட்சி மின் மயானத்தில் எரித்து, தனது மனைவி இறந்துவிட்டதாக கூறி ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் வாங்கி ஒடிசாவில் மோகனா மீது நிலுவையில் இருந்த மோசடி வழக்கை முடித்துள்ளான்.
பின்னர் சில காலம் கழித்து 2013-ல் மனைவி பெயரில் நிலம் பத்திர பதிவு செய்யும் போது, சிக்கிக் கொண்ட ராஜவேல், மனைவி இறந்துவிட்டதாக யாரோ தவறாக இறப்புச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக மழுப்பியுள்ளான். இது குறித்து மாநகராட்சி தரப்பில் இருந்து போத்தனூர் போலீசில் புகார் அளிக்கவே, மனைவி உயிரோடு இருக்கும் போது அவரது பெயரில் இறப்புச்சான்றிதழ் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மனைவியை விடுவிக்க ராஜவேல் ஆள் மாறாட்ட கொலையை அரங்கேற்றியதும் அம்பலமானது. இதனையடுத்து, 2014-ல் வழக்கறிஞர் தம்பதியான ராஜவேல் - மோகனா, கொலைக்கு உடந்தையாக இருந்த பொன்ராஜ், பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் வழக்கறிஞர் தம்பதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, மொத்தமாக ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட கார் ஓட்டுநர் பழனிசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான பொன்ராஜ் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், அவர் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தனி வழக்காக விசாரணை நடைபெற்று வருகிறது