தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கியிருந்த 2 ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகளை கைது செய்ததன் மூலம், பயங்கர சதித் திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.
டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சராய் கலே கான் பகுதியில் (Sarai Kale Khan) உள்ள மில்லினியம் பார்க் அருகே நேற்றிரவு 10.15 மணியளவில் போலீசார் மறைந்திருந்தபோது அங்கு வந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 ஆட்டோமெடிக் பிஸ்டல் துப்பாக்கிகள், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரும், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 20 வயது நிரம்பிய அப்துல் லதீப், முகம்மது அஸ்ரப் ஆவர். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், மேலும் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.