பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது.
இன்று அதிகாலையில் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களையும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 4 இடங்களையும் வென்றுள்ளன.
எதிர்க்கட்சிகள் அமைத்த மகா கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதாதளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரசுக்கு 19 இடங்களும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைத்துள்ளன.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியை எதிர்த்து வேட்பாளர்களைக் களமிறக்கிய சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி 143 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் பீகாரில் மீண்டும் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.