தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
2020-2021ம் ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு அண்மையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து கலந்தாய்வு மூலம் மாணவ- மாணவிகள், மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து ஆன்லைனில் மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளாக இம்மாதம் 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதன்பிறகு கலந்தாய்வு நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு இணையதளங்களில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ள போதிலும், ஆன்லைனில் அல்லாமல் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/, http://www.tnmedicalselection.org/ ஆகிய இணையதளங்களில் மாணவ- மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர், ரேங்க் பட்டியலும், கலந்தாய்வு தேதி அறிவிப்பும் 16ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 227 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் 77 இடங்களும் அளிக்கப்படும் என்றார்.