மாநிலங்களவையில் மேலும் 9 இடங்களை கைப்பற்றியதன் மூலம், பாஜக தனிபெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது.
இதற்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில், உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பாஜக சார்பில் 8 பேரும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். உத்தரகாண்டிலும் பாஜக வேட்பாளர் நரேஷ் பன்சால் என்பவர் மனுத்தாகக்ல் செய்தார்.
வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, வேறு யாரும் போட்டியிடாத நிலையில் மனுத்தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட 9 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களைவையில் பாஜக பெறும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையை பாஜக பெற்றுள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் எண்ணிக்கை 38 ஆக சரிந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து காங்கிரசின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 89 மட்டுமே ஆகும்.