டூ பிளஸ் டூ அமைச்சர்கள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியா புறப்பட்டனர்.
இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தும் விதமாக, கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்காக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் புறப்பட்டு இன்று இந்தியா வருகின்றனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் சாட்டிலைட் வரைபடங்களைப் பகிர்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லடாக் எல்லைப் பிரச்சனை, தென் சீன கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியையும் அமெரிக்க அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
தமது இந்திய பயணம் குறித்து டுவிட் செய்துள்ள மைக் போம்பியோ, இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, உறுதியான, வளமையான நாடுகளுடன் உறவில் இணையும் இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஆசியாவிலும், உலகிலும் இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை வரவேற்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.