சென்னையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனங்கள் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னையில் மாலையில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. சென்னை உயர்நீதிமன்றம் அருகே குளம் போல் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூழ்கின. அலுவலக வேலை முடிந்து சென்றவர்களின் வாகனங்கள் பழுதடைந்ததால் தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை நீரில் சிக்கி பழுதான வாகனங்களை பலர் சிரமத்துடன் தள்ளிச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஈவிகே சம்பத் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சேப்பாக்கத்தில் கனமழையால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. மழை மேகங்களால் வானம் இருண்டு போனதால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி பல வாகனங்கள் சென்றன. மெரினா காமராஜர் சாலையில் தண்ணீர் ஒரு அடி அளவுக்கு தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பலர் தள்ளி சென்றனர்.
அடைமழையால் திருவல்லிக்கேணி காவல் நிலையம் உள்ளே தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினரே உடனடியாக அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் தேங்கிய மழை நீரால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்றவர்களும் கடும் அவதி அடைந்தனர். அண்ணாசாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கனமழை காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. உடனடியாக மழை நீரை நிர்வாகத்தினர் அகற்றினர்.