சென்னை வடபழனியில், தரம் குறைந்த முறையிலும் தவறான முடிவுகள் வரும் வகையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக, ஆர்த்தி ஸ்கேன்ஸ் அண்டு லேப் மூடப்பட்டது.
கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டண புகார்கள் அவ்வப்போது எழுந்தன.
இந்நிலையில், சென்னை வடபழனியில் 60 அடி சாலையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் அண்டு லேப் மீது, தரம் குறைந்த முறையிலும் தவறான முடிவுகள் வரும் வகையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக புகார் எழுந்தது. அங்கு, 128 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 44 பரிசோதனைகள் உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என பொது சுகாதாரத்திட்ட இயக்குனரகத்தால் கண்டறியப்பட்டது.
ஒரு கொரோனா பரிசோதனை முடிவில், கொரோனா இல்லை என்பதற்கு பதிலாக கொரோனா உறுதி என ஆய்வகம் அறிக்கை கொடுத்துள்ளதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டது.