நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதம் அளவிற்கு சரியும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆர்டிஜிஎஸ் பணப்பரிவர்த்தனை முறை வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இரு மாதங்களுக்கு ஒருமுறை செலாவணிக் கொள்கை அறிவிப்பை வெளியிடும் ரிசர்வ் வங்கி, கடந்த முறை போலவே, இந்த முறையும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.3 சதவீதமாகவும் மாற்றமின்றி நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் மாற்றமின்ற நீடிக்கும்.
பணவீக்கம் அடுத்த 3 மாதங்களில் குறையும், நடப்பு நிதியாண்டில் அது திட்டமிட்ட இலக்கிற்குள்ளேயே இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இருப்பினும் நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதம் அளவிற்கு சுருங்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். எனவே, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் பூச்சியத்திற்கு கீழே சென்று மைனஸில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளுக்கு இடையே உடனடி பணப் பரிவர்த்தனைக்கான RTGS முறை மூலம், வருடம் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.