கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவை திருமணம் செய்த சவுந்தர்யாவை, காதல் கணவருடன் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சவுந்தர்யாவை தங்கை என்று கூறி பழகி தற்போது தாரமாக்கிய பிரபுவிடம் இருந்து தனது மகளை மீட்க மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி .கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜர்படுத்தப்பட்ட சுவாமிநாதன், சௌந்தர்யா இருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களின் கருத்துக்களை நீதிபதிகள் கேட்டனர். சாமிநாதன் கூறுவதுபோல, பிரபு மற்றும் அவரின் தந்தை கடத்தி சென்றார்களா? விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்துள்ளார்களா? கட்டாயப்படுத்தி விருப்பத்திற்கு மாறாக பிரபு திருமணம் செய்துள்ளாரா? என சௌந்தர்யாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தன்னை யாரும் கட்டாயப்படுத்தவோ அடைத்து வைக்கவோ இல்லை என்றும், விருப்பத்தின் அடிப்படையிலேயே பிரவுவை திருமணம் செய்து கொண்டதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த பெண் என்பதாலும் தன்னுடைய விருப்பப்படியும் கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என சௌந்தர்யா தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சௌந்தர்யாவை பிரபுவுடன் செல்ல அனுமதியளித்து வழக்கை முடித்துவைத்தனர்.