இந்திய விமானப்படை நாளையொட்டி உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வான்சாகசங்கள் ஆகியன நடைபெற்றன.
1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் ராயல் ஏர் போர்ஸ் என்னும் பெயரில் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. அதன் 88ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று இந்திய விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெண் விமானி சிவாங்கி ரஜாவத் விமானப்படையின் கொடியை ஏந்திச் சென்றார். விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் படாரியா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்குப் பதக்கங்களையும் விமானப்படைத் தளபதி படாரியா வழங்கினார். அதன்பின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வான்சாகசங்கள் நடைபெற்றன. போர்விமானங்கள் செங்குத்தாக மேலும் கீழும் பறந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
விமானப்படை நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் வான்பரப்பைக் காப்பது மட்டுமின்றிப் பேரிடர்க் காலத்தில் மனிதநேயத் தொண்டாற்றுவதில் முன்னணிப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.