வேதியியலுக்கான நோபல் பரிசு இரு பெண் அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்சை சேர்ந்த எமானுல் சார்ப்பென்டியர் (Emmanuelle Charpentier), அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் ஏ.டவுட்னா (Jennifer A. Doudna) ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்தது.
மரபணு நிலையில் மாற்றங்கள் செய்யவும் கோளாறுகளை சரிசெய்யவும் உதவும் மரபணு பொறியியல் என்பது நவீன அறிவியலின் முக்கியமான துறையாகும். இந்த துறையில், டிஎன்ஏ அளவில் மாற்றங்களை செய்வதற்கு, "மரபணு கத்தரிக்கோல்" என்ற டெக்னிக் மிக முக்கியமானதாகும்.
இந்த "ஜெனிட்டிக் சிசர்ஸ்" முறையை பயன்படுத்தியே, டிஎன்ஏ அளவில் தேவையற்ற கூறுகளை நீக்குதல், சேர்த்தல், மாற்றியமைத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
பரம்பரையாக வரக்கூடிய மரபணு சார்ந்த நோய்களையும், புற்றுநோய்களையும் குணப்படுத்தும் மருத்துவத்தில் இந்த "ஜெனிட்டிக் சிசர்ஸ்" முறை அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்காகவே, எமானுல் சார்ப்பென்டியருக்கும், ஜெனிஃபர் ஏ.டவுட்னாக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.