ஹெபாடைடிஸ் சி வைரசை கண்டறிந்ததற்காக, மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்ட்டர், சார்லஸ் எம்.ரைஸ், பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் ஹாஃப்டன், ஆகிய 3 பேருக்கும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தின் வழி பரவி கல்லீரலை பாதிக்கும் ஹெபாடைடிஸ் சி வைரஸ், உலகளவில் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேருக்கு ஹெபாடைடிஸ் தொடர்பான பாதிப்புகள் உள்ளதாகவும், ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் மரணம் அடைவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
கல்லீரல் அழற்சி தொடங்கி கல்லீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக் கூடிய ஹெபாடைடிஸ் சி வைரசை அடையாளம் கண்டு, அதை முறியடிப்பதற்கு பங்களிப்பு செய்ததற்காக மூவரும் கூட்டாக நோபல் பரிசைப் பெறுகின்றனர்.
ஹெபாடைடிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களில் இருந்து ஹெபாடைடிஸ் சி வைரசை பிரித்து அடையாளம் கண்டதற்காக ஹார்வி ஜே.ஆல்ட்டருக்கும், ஹெபாடைடிஸ் சி நோயறிமுறைக்கான சோதனையை உருவாக்கியதற்காக மைக்கல் ஹாஃப்டனுக்கும், ஹெபாடைடிஸ் சி வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை மரபணு ஆராய்ச்சி வழி நிறுவியதற்காக சார்லஸ் எம்.ரைஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்கும் தங்கப் பதக்கம், சான்றிதழ், சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகை பிரித்து வழங்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக மருத்துவ உலகம் போராடி வரும் நிலையில், ஹெபாடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.