உலகின் மிகநீண்ட நெடுஞ்சாலை குகைப் பாதை என வர்ணிக்கப்படும், அடல் சுரங்கச்சாலையை இமாச்சலப்பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடந்த 2000-ஆவது ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ரோத்தங் சுரங்கச்சாலைக்கு திட்டமிடப்பட்டு, 2002ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. அடல் சுரங்கச் சாலை என கடந்த 2019ஆண்டில் பெயர் சூட்டப்பட்டு, பணிகள் நிறைவுபெற்ற நிலையில், பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் பீர்பாஞ்சல் மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 171 அடி உயரத்தில், லே - மணாலி நெடுஞ்சாலையில் அடல் சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியையும், லாகல்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கையும் இணைக்கும் இந்த குகைப்பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோமீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை மூலம், மணாலி - லே இடையேயான பயணத் தொலைவு 46 கிலோ மீட்டர் அளவுக்கும், மணாலி - லே இடையேயான பயண நேரம் 4 முதல் 5 மணி நேரம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வழித்தடங்கள் கொண்ட இந்த சுரங்கச்சாலை ஒற்றைக்குழாய் அமைப்பில் குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்கள், 1500 டிரக்குகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம்.
வழிநெடுக சிசிடிவி கேமிராக்கள், அவசர உதவிக்கு அழைக்க 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள், 60 மீட்டர் இடைவெளியில் தீத்தடுப்பு அமைப்புகள், வெளியேறுவதற்கான அவசர வழி, வாகனபோக்குவரத்தின் நிலை, வாகனங்களின் வேகம் உள்ளிட்டவற்றை கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் auto incident detection முறை உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகள் இந்த சுரங்கச்சாலையில் உள்ளன.
நாட்டைப் பாதுகாப்பதே தங்களது முக்கியமான பணி எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, எல்லைகளை ஒட்டி ஏற்படுத்தப்படும் சாலைகளும், பாலங்களும் பொதுமக்களுக்கும் ராணுவத்திற்கும் ஒருசேர பயனளிப்பதாக தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில், 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கச்சாலையை திறந்துவைத்த மோடி, அந்த சாலையில் காரில் பயணித்து பார்வையிட்டார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 2002ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சுரங்கச்சாலை பணிகள், பின்னர் ஆமை வேகத்தில் நடைபெற்றதாகவும், 2014ஆம் ஆண்டு வரை வெறும் 1300 மீட்டருக்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த வேகத்தில் பணிகள் நடந்திருந்தால் 2040ஆம் ஆண்டில்தான் பணிகள் முடிந்திருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், 26 ஆண்டுகள் இழுத்திருக்க வேண்டிய பணியை 6 ஆண்டுகளில் முடித்திருப்பதாகக் கூறினார்.