ஏற்காட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டையடுத்துள்ள காவேரிபீக் கிராமத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புத்ராம் என்பவர் தன் மனைவி ஹங்கியுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் அங்குள்ள எஸ்டேட்டில் பணி புரிந்து வந்துள்ளனர். ஹங்கி கர்ப்பிணியாக இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசித்த புத்ராமின் உறவினரானன கோண்டாபகன் என்பவரின் மனைவி சுதிகேன்ஸ் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று கூறி நாட்டு மருந்து ஒன்றைத் தயாரித்து ஹங்கிக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், நாகலூர் மருத்துவமனையில் ஹங்கிக்கு குழந்தை பிறந்த போது, தாயும் சேயும் இறந்து போனார்கள்.
ஒரே நேரத்தில் மனைவியும் குழந்தையும் இறந்து போனதால், புத்ராம் தனிமரமானார். சுதிகேன்ஸ் கொடுத்த நாட்டு மருந்து காரணமாகவே தன் மனைவியும் குழந்தைகயும் இறக்க காரணம் என்று புத்ராம் கருதினார். இதையடுத்து, பழிவாங்கும் விதத்தில் இருவரையும் கொலை செய்ய தன் உறவினர்கள் உதவியை நாடியதோடு, திருப்பூரிலுள்ள உள்ள தன் நண்பர் ஹைராபோத்ரேவையும் ஏற்காட்டுக்கு அழைத்துள்ளார். திருப்பூரிலிருந்து ஏற்காடு வந்த ஹைராபோத்ரே, கோண்டாபகன்- சுதிகேன்ஸ் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்த நிலையில்தான், கோண்டாபகனும் சுதிகேன்சும் கடந்த 29 -ஆம் தேதி இரவு வீட்டுக்குள் வெட்டபட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அவர்கள் வீட்டிலிருந்த ஹைராபோத்ரே தலைமறைவாகிவிட்டார்.
காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அருகருகே வசித்து வந்த முச்ரே, சுக்ராம், ராம்சன் ஆகிய வட மாநிலத் தொழிலாளர்களைக் கைது செய்து விசாரித்த போது இந்தத் தகவல் தெரிய வந்தது. மேலும், தலைமறைவாகியுள்ள புத்ராம் மற்றும் ஹைராபோத்ரே ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கைதானவர்கள் ஓமலூர் சப் -ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.