அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி, கல்யாண்சிங், சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மசூதியை இடிக்கச் சதி செய்ததாகவும், இரு சமூகங்களிடையே பகைமையை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
அத்வானி, ஜோசி, உமாபாரதி ஆகியோர் மசூதி அருகில் நின்று கொண்டு வன்முறையாளர்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்டோரில் உயிருடன் உள்ள 32 பேரையும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டித் திட்டமிடப்பட்டது இல்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராகப் போதுமான சான்றுகள் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சிபிஐ வழங்கிய வீடியோ, ஆடியோவின் நம்பகத் தன்மையை மெய்ப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மசூதியைச் சமூக விரோதிகள் இடித்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தவே குற்றஞ்சாட்டப்பட்டோர் முயன்றதாகவும், சிபிஐ தாக்கல் செய்த ஆடியோவில் பேச்சு தெளிவாக இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாகத் தீர்ப்பையொட்டி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்குக் காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குற்றஞ்சாட்டப்பட்டோரில் பலர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி, கல்யாண் சிங் ஆகியோர் காணொலியில் ஆஜராகினர்.