சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் உட்பட சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் 2-வது முறையாக ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் பிரண்ட்ஸ் ஆப் போலீசுடன் இணைந்து ஜெயராஜ் - பென்னிக்ஸை தாக்கியது காவலர் முருகன் அளித்த வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ள நிலையில், இதுவரை பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த யாருமே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படவில்லை என ஜாமீன் கோரிய காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதி, சம்பவத்தை நேரடியாக பார்த்த சாட்சிகள் இருக்கும் போது காரணம் குறித்து ஆராய தேவையில்லை என்றும், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து சாட்சிகள் கலைக்கப்பட்டுவிடக்கூடாது என நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக கூறினார்.
இந்த வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸின் பங்கு என்ன என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் தாக்கப்படும் போது, அவர்களின் கைகளை தாமஸ் பிரான்சிஸ் தான் பிடித்திருந்ததாகவும், கைகளை பிடித்து வைத்தே அதிகாலை 3 மணி வரை தாக்கியதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.