பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28 முதல் நவம்பர் 7ம் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாள்களும், மாதங்களும் கடந்தபிறகும் கொரோனா பரவல் குறைவது போல தெரியவில்லை என்பதால் ஜனநாயக கடமைகளை நினைவில் கொண்டு, தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய அவர், முதல்கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கும், 2வது கட்ட தேர்தலில் 94 தொகுதிகளுக்கும், 3வது கட்ட தேர்தலில் 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றார்.
மேலும் 3 கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் மாதம் 10ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரோரா கூறினார்.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பதற்கு பதிலாக ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்ற எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரம் கூடுதல் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அரோரா கூறினார்.
கொரோனா பாதித்து தனிமையில் இருப்போருக்கு, தபால் மூலம் வாக்களிக்கும் வசதியுடன் சேர்த்து, வாக்குப்பதவின் கடைசி நாளில் சுகாதாரத்துறையினர் மேற்பார்வையில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 மக்களவைத் தொகுதி, சில மாநிலங்களில் காலியாக இருக்கும் 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எப்போதும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு 29ம் தேதி வெளியிடப்படும் எனவும் அரோரா குறிப்பிட்டார்.