புதுச்சேரி கடற்கரை சாலை அருகே 74 பழங்கால சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழக சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வழக்கின் பின்னணியில் கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி கோலாஸ் நகரை சேர்ந்த மரியா என்ற பெண் கைது செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சிலைகளும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், 4 வருடம் கழித்து வியாழக்கிழமை புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் மரியாவின் தந்தை ராஜரத்தினம் மற்றும் அண்ணன் ஜான் பால் கொண்டப்பா ஆகியோரது வீட்டில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் 64 ஐம்பொன் வெண்கல சிலைகள் மற்றும் 10 கற்சிலைகள் மீட்கப்பட்டன. தொல்லியல் நிபுணர்கள் மூலம் சிலைகளின் காலக்கட்டதை அறிய முடிவு செய்துள்ளனர்.