பிரான்சில் இருந்து கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியா வந்த 5 ரபேல் போர் விமானங்களும் இன்று விமானப்படையில் முறையாக இணைக்கப்பட்டன.
இந்திய விமானப்படைக்காக பிரான்ஸின் டஸ்ஸால்ட் (Dassault) நிறுவனத்திடமிருந்து 36 அதிநவீன ரபேல் விமானங்கள் வாங்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் 2016 செப்டம்பர் மாதம் கையெழுத்தானது.
முதற்கட்டமாக அவற்றில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அந்த விமானங்களை அம்பாலாவில் உள்ள விமானப்படையின் 17 ஆவது ஸ்குவாடரனான கோல்டன் ஆரோஸ் (Golden Arrows) -ல் முறைப்படி இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பங்கெடுப்பதற்காக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்ட பின், அவரும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதவுரியா உள்ளிட்டோரும் விமானப்படை விமானத்தில் அம்பாலா புறப்பட்டு சென்றனர்.
அம்பாலா விமானப்படை தளத்தில் அனைத்து மத பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வானில் பறந்து உயர்ந்த ரபேல் விமானங்கள், தலைகீழாகவும், மேல் கீழாகவும், சரிவாகவும் பறந்து சாகச காட்சிகளை நடத்தின.அப்போது தேசபக்தியை குறிக்கும் பாடல்கள் பின்னணியில் இசைக்கப்பட்டன.
பின்னர் தரையிறக்கிய ரபேல் விமானங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவற்றுக்கு தண்ணீர் பீரங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் விமானப்படையின் சரங் ஏரோபேட்டிக் குழுவினர் கண்ணைக்கவரும் சாகச நிகழ்ச்சிகளை வானில் நடத்திக் காட்டினர்.
ரபேலின் அடுத்த பேட்ச் விமானங்கள் வரும் அக்டோபர் மற்றும் டிசம்பரில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டுவிட்டர் பதிவிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேலை வாங்கிது, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா நடத்திய மிகப்பெரிய ராணுவ கொள்முதல் என குறிப்பிட்டுள்ளார்.
ரபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும், வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டவை. பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளைக் குறிவைக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மட்டுமின்றி, மல்டி மிஷன் மற்றும் டீப் ஸ்ட்ரைக் குரூஸ் ஏவுகணைகளையும் ரபேல் விமானங்களால் சுமந்து செல்ல முடியும்.