தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வல்லநாட்டில் இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியைப் பிடித்தபோது குண்டுவெடிப்பில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். அவரது உடல் கூறாய்வுக்குப் பின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
வீட்டில் இருந்து சுப்பிரமணியன் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின் காவலர் உடல் வைக்கப்பட்ட பெட்டியை ஐஜி முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சுமந்து சென்றனர். அங்குத் தமிழக டிஜிபி திரிபாதி, தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் முருகன், திருநெல்வேலி சரகத் துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது.
சுப்பிரமணியனின் மனைவி 11 மாதக் கைக்குழந்தையுடன் அழுதுபுரண்டது காண்போரைக் கண்கலங்கச் செய்தது. டிஜிபி திரிபாதி அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றினார். அதன்பின் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.